டெல்லி அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா - பதற்றத்தில் வீரர்கள்
ஐபிஎல் தொடரில் கொரோனா பரவ தொடங்கியுள்ள நிலையில் டெல்லி அணி நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ-பபுள் வளையத்திலிருந்து வருகிறார்கள்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 15ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மூத்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்க்கு கொரோனா உறுதியானது. இதற்கு மறுநாள் அணியில் வீரர்களுக்கு மசாஜ் அளிக்கும் தெரபிஸ்டுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 16ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி பங்கேற்றது. அதன்பின் 17ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக புனே செல்லவிருந்தது.
ஆனால் வழக்கமாக அணியைச் சேர்ந்தவர்களுக்கு எடுக்கப்படும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ்க்கு முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தநிலையில், 2வது சோதனையில் பாசிட்டிவ் என வந்தது. இதனால் டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு ஐபிஎல் நிர்வாகம் வழிகாட்டுதல்களின்படி ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதேசமயம் அந்த அணியின் சமூக வலைத்தளக் குழுவைச் சேர்ந்த ஒருவர், டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டலைச் சேர்ந்த 3 ஊழியர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மிட்சல் மார்ஷ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட இருந்தது. ஆனால், டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.