அந்த IPL அணி, என்னை நம்பவைத்து ஏமாற்றியது - ஏபி டி வில்லியர்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லி அணி தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறியதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ்
முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடுவதற்கு முன்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.
முதல் மூன்று சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடிய பின்னரே அவர் ஏலத்தில் பெங்களூரு அணியில் எடுக்கப்பட்டார். மேலும் பெங்களூரு அணிக்காக விளையாடி 4521 ரன்கள் அடித்திருக்கிறார்.
இந்நிலையில் டெல்லி அணி தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறியதாக, டி வில்லியர்ஸ் அவரது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "2010 ஆம் ஆண்டு சீசனில் நான் டெல்லி அணியில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த அணி நிர்வாகிகள் என்னை, அலுவலகத்திற்கு அழைத்தார்கள்.
டெல்லி அணி
அடுத்த ஆண்டு உங்களை நாங்கள் தக்க வைத்துக் கொள்வோம் என்று அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். அப்போது என்னுடன் டேவிட் வார்னரும் அந்த மீட்டிங்கில் இருந்தார்.
ஆனால் இரண்டு வாரத்திற்கு பிறகு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் என்னை டெல்லி அணி விடுவித்து விட்டார்கள். அந்த அறிவிப்பை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். 2019 சீசனில் நான் வெறும் ஐந்து போட்டிகள் தான் விளையாடியிருந்தேன் என நினைக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எனக்கு அப்போது வந்து விட்டது.
சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் பெரிய அளவில் அப்போது சாதிக்கவில்லை. அப்போதுதான் ஏலம் நடைபெற்றது. அதில் அதிர்ஷ்டவசமாக நான் பெங்களூரு அணியில் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறியது. பெங்களூரு அணியுடன் எனக்கு நல்ல நினைவுகள் அதிகம் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.