தேர்வுக்கு படிக்காததால் பயம் - பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்
தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்திவைக்க பள்ளிக்கு மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்கள்
டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 13 ஆம் தேதி மட்டும் 30 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதே போல் டெல்லி ரோகினி பகுதியில் உள்ள இரு பள்ளிகளுக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தேர்வு பயம்
இதனையடுத்து டெல்லி சிறப்பு காவல் படையினர் இது தொடர்பான விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அந்தந்த பள்ளியை சேர்ந்த மாணவர்களே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்துள்ளது.
அந்த மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், தேர்வுக்கு சரியாக படிக்காததால், பயத்தில் தேர்வில் தள்ளிவைக்க இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். சிறுவர்கள் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் அறிவுரை கூறி அனுப்பியதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 14 ஆம் தேதி இதே போல் ஈமெயில் மூலம் பள்ளிக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வழங்கிய மாணவன் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் எச்சரித்தோடு, மாணவனின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறு பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.