அனுமன் ஜெயந்தி விழா கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தது டெல்லி காவல்துறை
டெல்லி ஜஹாங்கீர் பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அனுமன் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில் இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்கினர். இதில் பல போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை தாக்குதலில் அங்கிருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் , வாகனக்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

காயமடைந்த அனைவரும் பாபு ஜாக்விஜீவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வெடித்த மோதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எந்த பாரபட்சமும் இன்றி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா திட்டவட்டமாக கூறியிருந்தார். மேலும், டெல்லி கிரிமினல் பிரிவு சார்பாக 14 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கலவரம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதன் அடிப்படையில் முதல்கட்ட அறிக்கையை தயாரித்துள்ள டெல்லி காவல்துறை அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்று சமர்ப்பித்துள்ளது.
இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.