“ஒமைக்ரான் பரவல் எதிரொலி ; டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை”- பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு
ஒமைக்ரான் பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக 22 மாநிலங்களில் ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , டெல்லியில் 165 பேருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 167 பேரில் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், டெல்லியில் 23 பேர் மட்டுமே குணமாகி உள்ளனர்.
இந்நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மீண்டும் பள்ளிகளை மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்களும் மீண்டும் மூடப்படுகின்றன.
பேருந்து , மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அனைத்துவித கொண்டாட்டங்களுக்கும் தடை என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி, உணவகங்கள் இரவு 10 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி என்றும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.