நாய் குரைத்ததால் எரிச்சல் : 85 முதியவரை அடித்து கொன்ற சிறுவன் ; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
நாய் குரைத்துக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் ஒருவன் நாயின் உரிமையாளரை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நசஃப்கர் பகுதியில் வசித்து வருபவர்கள் வயது முதிர்ந்த அஷோக் குமார்(வயது 85)- மீனா தம்பதி.
இவர்களது வீட்டில் செல்லப்பிராணியான நாய் ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, 17 வயது சிறுவன் ஒருவன், அஷோக் குமாரின் நாய் குரைத்துக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்து நாயை தாக்கியுள்ளான்.
இதனால் நாயின் உரிமையாளரான முதியவருக்கும் சிறுவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்கு வாதத்தில் அருகே இருந்த இரும்பு கம்பியைக் கொண்டு முதியவரின் தலையில் வேகமாக அடித்துள்ளான் சிறுவன்.
இதனால் மயங்கி விழுந்த முதியவரை அவரது மனைவி மீனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த முதியவர் அஷோக் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.
நாய் குரைத்ததற்காக வயதானவர் என்றும் பாராமல் சிறுவன் செய்த செயல் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.