டெல்லியில் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு

lockdown increase delhi one week
By Praveen May 01, 2021 02:05 PM GMT
Report

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்வதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன. ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை தெரிவித்து இருந்தது.

இதனால், தொடர்ந்து 9வது நாளாக 3 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை நாடு சந்தித்தது. இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சம் எண்ணிக்கையை இன்று கடந்து அதிர்ச்சி அளித்து உள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 993 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்து உள்ளது. நாட்டில் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுவரை மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் குறிப்பாக டெல்லியில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. 3-ம் தேதி காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், மே 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.