மக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் வாக்குவாதம் செய்ய வேண்டுமா? - மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.
உலகத்தில் வேறு எங்குமே இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,00,000 பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரழக்கும் துயர சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இந்தியாவிற்கு உலக நாடுகள் முழுவதிலுமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி, தேக்கத்திற்கான உபகரணங்களும் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு மாநில அரசுகளுக்கு உரிய ஆக்சிஜனை வழங்குவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

டெல்லிக்கு தேவையான 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தவறாமல் ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசை அதனை ஒதுக்கவில்லை. இன்று நடைபெற்ற விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை கடுமையான கண்டித்துள்ளது.
மேலும், “மக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் வாக்குவாதம் செய்ய வேண்டுமா? நாங்கள் உத்தரவிட்ட பிறகும் நீங்கள் ஆக்சிஜனை ஒதுக்கவில்லை.
உங்கள் மேல் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக்கூடாது என விளக்கம் கொடுங்கள் என உத்தரவிட்டு மத்திய அரசு அதிகாரிகள் நாளை விசாரணையின்போது ஆஜராக உத்தரவிட்டுள்ளது”