பிரதமருக்கு புதிய வீடு, புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்திற்கு தடையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் மோடிக்கு புதிய வீடு கட்டும் செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ததோடு அந்த வழக்கை தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதே சமயத்தில் செண்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.
இந்தத் திட்டத்தின்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் மோடிக்கு புதிய வீடு கட்டப்பட்டுள்ளன. இதற்காக ஏற்கனவே உள்ள பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதற்கு கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி வரை செலவிடப்பட உள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த திட்டத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு செலவிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
ஆனால் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு இந்தத் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றி வந்தது. இந்த திட்டத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு அனுமதியளித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம் இந்தத் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய திட்டம் என்றும் தெரிவித்துள்ளது.