“மனைவியின் விருப்பம் இல்லன்னா அது குற்றம் தான்” - திருமணத்திற்குள்ளான பாலியல் வன்புணர்வு குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

case judgement marital rape delhi high court
By Swetha Subash Jan 13, 2022 07:46 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஒரு பெண் திருமணத்திற்குள்ளான பாலியல் வன்புணர்வைக் (Marital Rape) குற்றமாக அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்தியச் சட்டத்தின் கீழ், ஆண், பெண் ஒருவரின் சம்மதமின்றி அவருடன் உடலுறவு கொள்வாராயின் அது பாலியல் வன்புணர்வு குற்றங்களாக கருதப்படும்.

இருப்பினும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375-ன் படி, 15 வயதுக்குக் குறைவான பெண்ணாக இல்லாத பட்சத்தில், தனது சொந்த மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது அல்லது பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வன்புணர்ச்சி ஆகாது.

இந்த வழக்கில் இந்த வேறுபாட்டை சுட்டிக் காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம், "சட்ட ரீதியான திருமண ஒப்பந்தத்தை தாண்டி, இணக்கமற்ற பாலியல் உடலுறவை (Non-Consensual Sex) மறுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்களுக்கும் உண்டு.

மேலும், திருமணம் என்ற உறவு ஒப்பந்தம், உடலுறவு என்ற கட்டுப்பாட்டிற்கான மொத்த சம்மதத்தை வழங்குகிறதா? என்று நீதிபதிகள் கேள்வு எழுப்பினர்.

பெண் என்ற முறையிலும், அரசியல் சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையிலும் அடிப்படை ஆதார மாண்புகளை அனுபவிக்கும் உரிமை திருமணமான, திருமணமாகாத பெண்கள் இருவருக்கும் உண்டு என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதை யாரும் மறுக்க முடியாது, சட்டமும் அனைவருக்கும் ஒரேவகையான பாதுகாப்பை அளிக்கும் என்ற இந்திய அரசியலமைப்பின் 14,15,16,17,18,21 திட்ட விதிகளை சுட்டிக் காட்டிய நீதிபதிகள்,

கணவன் மீது பாலியல் வன்புனர்வுக்கான குற்றம் சுமத்த ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லை என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த டெல்லி அரசு, "குடும்ப வன்முறைக்கு எதிராகப் பெண்களைக் காக்கும் சட்டத்தின் கீழ், பாலியல் வன்முறை என்று குற்றம் சாட்டி குற்றவியல் வழக்குகளை பதிவு செய்யலாம் (IPC section 498A).

மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் ஆண் ஒருவரை விவாகரத்து பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கு உண்டு.

மேலும், IPC-யின் பிரிவு 376B-யின் படி, பிரிந்திருக்கும் மனைவியை, அவளின் ஒப்புதல் இல்லாமல், அவளின் கணவன் உடலுறவு கொள்வது குற்றமாகும்.

எனவே, (மனைவி சட்டப்படி பிரிந்திருக்கிறார்களா இல்லையா என்பது பொருட்டில்லாமல்) கணவனைப் பிரிந்து வாழும் சமயத்தில் கணவன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால்,

அவர் IPCயின் பிரிவு 376Bயின் படி தண்டனைக்குரியவர் ஆவார்" என்று தெரிவித்தது.

இதற்குப் பதிலளித்த நீதிபதிகள்," மற்ற சட்டங்களின் கீழ் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்பதை எப்படி ஏற்க முடியும். இது எத்தகைய வாதம்?

உதாரணமாக, மாதவிடாய் சுழற்சி நாட்களின் போது இணக்கமற்ற முறையில் மனைவியுடன உடலுறவு கொள்ள ஆண் ஒருவர் நிர்பந்திக்கிறான்.

வன்முறையைக் கையாளுகின்றான். இதை, குற்றமாக ஏற்க முடிந்த உங்களுக்கு, ஏன் அதனைப் பாலியல் வன்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்று காட்டமாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.