உங்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது - டெல்லி அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்
இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனாவின் இரண்டாம் அலையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுள் டெல்லியும் ஒன்று.
அங்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததால் ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆக்சிஜனுக்கான அவசர கோரிக்கைகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முழுவதும் காணப்பட்டன. இந்நிலையில் டெல்லிக்கு போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை எழுந்தது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. அந்த வழக்கில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அனைவரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சில நிறுவனங்கள் ஆஜராகததால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டுள்ளது. மேலும் சேத் யேர் என்கிற ஆக்சிஜன் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை டெல்லி அரசே எடுத்து நடத்த வேண்டும் என்கிற அதிரடியான உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சேத் யேர் நிறுவனம் மருத்துவ தேவைக்கு ஆக்சிஜன் வழங்கவில்லை என்றும் கள்ளச் சந்தைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்குவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் கெஜ்ரிவால் அரசு கொரோனா பேரிடரை கையாண்டதை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், டெல்லி அரசு மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கூடிய விரைவில் கட்டுக்குள் வரும் எனக் கூறப்பட்டு வருகிற நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.