50வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகளின் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 50 ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் பல ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் ஒரு சிறப்பு குழுவினை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், வேளாண் சட்டங்கள் முழுமையாக மத்திய அரசால் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இதனிடயே காஞ்சிபுரம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகிப் பண்டிகை கொண்டாடினர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூரில் வேளாண் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.