டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - சோனியாகாந்தி பங்கேற்பு

Stalin sonia-gandhi delhi-dmk-office-opening
By Nandhini Apr 02, 2022 11:43 AM GMT
Report

பாராளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டி கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்தது. டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது.

மத்திய அரசு உறுதி அளித்த நிலையில், திமுகவின் அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டு வந்தது. டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருகில் திமுக அலுவலக கட்டுமான பணிகள் நடந்தது வந்தன. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதன் பின்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று தங்கினார். கடந்த வியாழக்கிழமை பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதன் பின்பு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த கட்டிடத்துக்கு அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவ்விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஃபரூக் அப்துல்லா, ப.சிதம்பரம், சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ், வைகோ, திருமாவளவன், திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.