டெல்லியில் சோதனைக்கு மேல் சோதனை..பிணங்களை எரிக்க மரக்கட்டைகளுக்கு பற்றாக்குறை

wood delhi crisis deathrate
By Praveen Apr 28, 2021 06:58 PM GMT
Report

டெல்லியில் பிணங்களை எரிப்பதற்காக மரக்கட்டைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தினசரி கொரோனா பலி தொடர்ந்து 6வது நாளாக நேற்றும் 300ஐ தாண்டியது. கடந்த சில நாட்களாக நோயாளிகளுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பல நோயாளிகள் மூச்சு் திணறி இறந்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலும் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டதால், இப்போது இந்த பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இப்போது புதிய பிரச்னை எழுந்துள்ளது. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சடலங்களை எரிக்க இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலையில், மரக்கட்டைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகி இருக்கிறது.

இது குறித்து வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘தினசரி பலியாவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், விரைவில் சடலங்களை எரிப்பதற்கான மரக்கட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகி உள்ளது. எனவே, மயானங்களுக்குத் தேவையான மரக்கட்டைகளை விநியோகிக்க வனத்துறையிடம் வலியுறுத்த வேண்டும். கடந்த 10 நாட்களில் 5,100 சடலங்களில் எரியூட்டுதல் அல்லது அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இயற்கையாக மற்றும் வீட்டு தனிமையில் இருந்து மரணிப்பவர்களை கொண்டு செல்ல மேலும் 100 அமரர் ஊர்தி வாகனங்கள் தேவைப்படுகிறது,’ என கூறியுள்ளார். இதுதவிர, சடலங்களை எரியூட்ட இடப்பற்றாக்குறை நிலவுவதால், துவாரகாவின் செக்டார் 9 பகுதியில் 3.5 ஏக்கரில் நாய்களை அடக்கம் செய்ய உள்ள மயானம் தற்காலிகமாக மனிதர்களுக்கான மயான பூமியாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு டெல்லி உள்ளாட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.