டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிர்ச்சி தாவல் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிதீவிரமாக பரவி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 686 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 77 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 76 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். நேற்று இரவு இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்துள்ள ஊரடங்கு வரும் 26-ம் தேதி காலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும்.
அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுனிதா கெஜ்ரிவால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
மனைவி சுனிதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.