டெல்லி அணி போட்ட சூப்பரான ஸ்கெட்ச் - சிக்கிக்கொள்ளப் போகும் 3 வீரர்கள் இவர்கள் தான்
ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி தனது தொடக்க வீரர்களுக்கான இடத்தில் 3 பேரை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதோடு வீரர்களுக்கான மெகா ஏலமும் நடக்கவுள்ளது. இதனால் இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை ஏலத்தில் எடுக்கப்போகிறது என்ற கணிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே ஐபிஎல் தொடரில் இளம் படையுடன் வெற்றிகளை குவித்து வரும் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் தனது தொடக்க வீரர்களுக்கான இடத்தில் 3 பேரை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியின் அதிரடி ஓப்பனராக இருந்து வரும் இஷான் கிஷான் அங்கே சரியாக வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார். முதல் பந்து முதலே அடித்து ஆடக்கூடிய திறமையுள்ள இவரை ப்ரித்வி ஷாவுடன் களமிறக்கினால் பவர் ப்ளே ஓவர்களில் ரன் ரேட் உயரும் என டெல்லி அணி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.
இரண்டாவதாக டேவிட் வார்னர் முதன் முதலில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக தான் விளையாடினார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பினால் இளம் வீரர்களுக்கு ப்ளே ஆஃப் சுற்றுகளை கடக்க பெரும் உதவியாக இருக்கும். ஒருபுறம் ப்ரித்வி ஷா அதிரடி காட்ட, டேவிட் வார்னரால் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும் என நம்பப்படுகிறது.
மூன்றாவதாக வயதாகிவிட்டது என தவானை டெல்லி அணி கழட்டிவிட்ட நிலையில் அவர் தென்னாப்பிரிக்க தொடர் மூலம் தனது வயது பிரச்சினையே இல்லை என நிரூபித்து காட்டியதால் அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க டெல்லி அணி முயற்சிக்கும் என கூறப்படுகிறது.