டெல்லி கேபிடல்ஸ் அணியில் மீண்டும் ஷ்ரேயஸ் ஐயர்

IPL 2021 Shreyas Iyer Delhi Capitals
By Thahir Sep 02, 2021 09:00 AM GMT
Report

அறுவைச் சிகிச்சை செய்ததால் ஐபிஎல் போட்டியின் முதல் பாதியைத் தவறவிட்ட ஷ்ரேயஸ் ஐயர், ஐக்கிய அரபு அமீரகத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.  

டெல்லி கேபிடல்ஸ் அணியில் மீண்டும்  ஷ்ரேயஸ் ஐயர் | Delhi Capitals Ipl 2021 Shreyas Iyer

இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் தோள்பட்டைக் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஷ்ரேயஸ் ஐயர். தற்போது முழுவதும் குணமாகியுள்ளார்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் நடைபெற்ற உடற்தகுதிப் பரிசோதனையில் கலந்துகொண்டார். அதில் அவர் தேர்ச்சியடைந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார்.

டெல்லி அணி, ஷ்ரேயஸ் தலைமையில் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது. இந்த வருடம் அந்த அணி ரிஷப் பந்த் தலைமையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தற்போது, ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் அணியில் இடம்பெறவுள்ளதால் தில்லி கேபிடல்ஸின் கேப்டனாக யார் செயல்படப்போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியினருடன் மீண்டும் இணைந்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர்.

இதுபற்றி அவர் பேசும் போது, எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்காக நீண்ட நாளாகக் காத்திருந்தேன். அணியினர் விளையாடும்போது அதை தொலைக்காட்சியில் பார்ப்பது கடினமானது. ஒவ்வொரு ஆட்டத்தையும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து பார்த்தேன்.

மைதானத்தில் நானே இருப்பது போல எண்ணி அச்சூழலில் நான் எப்படி விளையாடுவேன் எனக் கற்பனைப் பண்ணிப் பார்த்துள்ளேன். இப்போது அது கடந்த காலம். அதை மறந்துவிட்டு அணியினர் நன்றாக விளையாடிவருவதை மீண்டும் தொடர வேண்டும் என்றார்.