சார் இந்த வயசுலையும் என்ன எனர்ஜி : தோனியை புகழ்ந்த கவாஸ்கர்

MS Dhoni Sunil Gavaskar Chennai Super Kings IPL 2022
By Irumporai May 13, 2022 03:05 AM GMT
Report

எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரிலும் விளையாடுவார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும், ராபின் உத்தப்பா 1 ரன்களில், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை அணியில் கேப்டன் எம்எஸ் தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார்.

ஒரு சில பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்சருக்கு அனுப்பி டோனி தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மற்ற பேட்டர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. ஷிவம் துபே (10), டுவைன் பிராவோ (12), சிமர்ஜித் சிங் (2), மகேஷ் தீக்ஷனா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி விக்கெட்டுக்கு முகேஷ் சவுத்ரியை கொண்டு 20 ஓவர்கள் ஆட தோனி முயற்சித்தார். இதனால் ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து அடுத்த ஓவரில் ஸ்டிரைக்குக்கு வர வேண்டிய நிர்பந்தம் தோனிக்கு இருந்தது.

இந்த நிலையில், ரைலி மெரெடித் வீசிய 16-வது ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க முயற்சித்தார் தோனி. ஆனால், முகேஷ் சவுத்ரி ரன் அவுட் ஆனார். இதனால், 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 33 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

சார் இந்த வயசுலையும் என்ன எனர்ஜி : தோனியை புகழ்ந்த கவாஸ்கர் | Definitely Not Sunil Gavaskar Dhoni Ipl 2022

இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். மற்ற பேட்டர்கள் யாரும் 13 ரன்களைக்கூட தொடவில்லை. மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் பிளே-ஆஃப் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் தவறவிட்டுள்ளது. 40 வயதான எம்எஸ் தோனி இந்த சீசனில் இதுவரை ஆடிய 12 போட்டிகளில் 199 ரன்களை 39.80 என்ற சராசரியில் 132.66 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார்.

தோனி இன்னமும் முழு எனர்ஜியுடன் இருக்கிறார் என்பதற்கு இந்த சீசன் ஒரு உதாரணம் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்எஸ் தோனி அடுத்த ஐ.பி.எல் தொடரிலும் விளையாடுவார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர்  கூறுகையில், ''தோனி விளையாடிய விதத்தைப் பாருங்கள். அவர் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இன்னும் எனர்ஜியுடன் இருக்கிறார் என்பதை அவரது ஆட்டங்கள் நமக்கு உணர்த்துகிறது. இன்றைய ஆட்டத்தில் பார்த்தோம்.

ஓடி ரன் எடுப்பதாக இருந்தாலும் சரி, அடித்து ஆடுவதாக இருந்தாலும் சரி அவர் முன்புபோல் இப்போதுமே சுறுசுறுப்பாக செயல்படுகிறார். தோனி நிச்சயமாக இப்போது ஓய்வு பெறமாட்டார். 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் தோனி நிச்சயம் விளையாடுவார் என கூறியுள்ளார்.