எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி : சர்வதேச போட்டிகளில் புதிய சாதனை படைத்த தீபக் ஹூடா
இதுவரை விளையாடியுள்ள அனைத்து சர்வதேச போட்டிகளிலுமே வெற்றி பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் தீபக் ஹூடா படைத்துள்ளார்.
இந்தியா ஜிம்பாவே போட்டி
(Ind Vs Zim )இந்தியா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்பே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரியான் புல் 39 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீச்சிய வேகப்பந்துவீச்சாளர் சர்தூல் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தீபக் ஹூடா
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்களும், சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தலா 33 ரன்களும், தீபக் ஹூடா 25 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
புதிய சாதனை
அதாவது தனது அறிமுக போட்டியில் இருந்து நேற்றைய போட்டிவரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஆக இது வரை ருமேனியா நாட்டைச் சேர்ந்த சாத்விக் நடிகோட்லா என்ற வீரர் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து 15 போட்டிகளில் வெற்றி பெற்றதே உலக சாதனையாக இருந்தது. அதனை தீபக் ஹூடா முறியடித்துள்ளார்.