‘தோனி செய்த தியாகம்’ - நன்றியுடன் நினைவுக் கூர்ந்த தீபக் சாஹர்
சென்னை அணி வீரர் தீபக் சாஹர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி செய்த தியாகம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தொகைக்குள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை அணியில் முந்தைய வீரரான வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவர் இவ்வளவு தொகைக்கு தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ள தீபக் சாஹர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை அணிக்காக தோனி செய்த தியாகம் அவர் தெரிவித்துள்ளார். அதாவது சென்னை அணி நிர்வாகம் முதன்மை வீரராக மகேந்திர சிங் தோனியை தக்க வைக்க விரும்பியது. ஆனால் ஓய்வு பெறும் நிலையில் உள்ள தோனி தனக்காக அவ்வளவு செலவு செய்ய வேண்டாம் என தெரிவித்ததாக தகவல் வெளியானது.
அதனைக் குறிப்பிட்டுள்ள தீபக் சாஹர் தோனி பணத்தை முதன்மையாகக் கருதவில்லை என்றும், ஒரு வீரரின் திறமையை பணத்தை வைத்து முடிவு செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.