”என்னை மன்னிச்சுடுங்க” - சென்னை அணியில் இருந்து வெளியேறிய தீபக் சாஹர் கடிதம்
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் தீபக் சாஹர் விலகியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது. இதற்கு காரணம் சென்னை அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதே ஆகும்.
சென்னை அணியில் ரூ.14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச போட்டியின் போது காயமடைந்தார். இருந்தாலும் அவர் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி எடுத்து வந்த நிலையில் முதல் சில போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும், வரும் 25ஆம் தேதி சிஎஸ்கே அணிக்கு தீபக் சாஹர் திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.
— Deepak chahar ?? (@deepak_chahar9) April 15, 2022
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதுகு பகுதியில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் 4 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் டி20 உலகக்கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஐபிஎல் தொடரிலிருந்து தீபக் சாஹர் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “அனைவரும் என்னை மன்னிக்கவும். துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து நான் வெளியேறுகிறேன். உண்மையில் விளையாட விரும்பினேன். ஆனால் நான் மீண்டும் சிறப்பாகவும் வலுவாகவும் வருவேன். எப்போதும் என்னை ஆதரிக்கும் உங்களுடைய அன்பு மற்றும் வாழ்த்துக்கள் தேவை” என குறிப்பிட்டுள்ளார்.