கடும் எதிர்ப்பில் தீபக் சாஹரின் லவ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சாஹர் காதலை வெளிப்படுத்திய நிகழ்வு குறித்து பலரும் சமூக தளங்களில் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தினார். அப்போது தோனியின் மனைவி சாக்ஷி, ரெய்னாவின் மனைவி ப்ரியங்கா மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அதே சமயம் இந்த செயல் சில எதிர்ப்புகளையும் பெற்றுள்ளது.
பொதுவாக கால்பந்து விளையாட்டு வீரர்கள் இதுபோன்று, போட்டியின் போது திடீரென அனைவரின் முன்பும் காதலை வெளிப்படுத்தி, தங்கள் அன்புக்கு உரியவர்களை சம்மதிக்க வைப்பார்கள். கிரிக்கெட் போட்டிகளில் எப்போதாவது நடப்பதுண்டு.
காதல் என்பது இருவர் மனதிலும் ஏற்பட வேண்டும். இவரை திருமணம் செய்தால், நம் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்ற உணர்வு இருவருக்குள்ளும் ஏற்பட வேண்டும். அதன் பிறகே காதல், கல்யாணம் என்ற அடுத்தடுத்த படிகளுக்கு செல்ல வேண்டுமே தவிர, இதுபோன்று மாஸ் கிரவுடில் "சர்பிரைஸ்" செய்கிறேன் என்று, அந்த பெண்ணின் முன்பு மண்டியிட்டு தன் காதலை வெளிப்படுத்துவது என்பது, மறைமுகமாக அந்த பெண்ணை 'என்னை நீ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்' என்று வற்புறுத்துதலுக்கு சமம் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்று, பலர் கூடியிருக்கும் ஒரு பொது நிகழ்ச்சியில், ஒரு பெண் முன்பு மண்டியிட்டு, அவளது விரலில் மோதிரம் அணிவித்து, என்னை ஏற்றுக் கொள் என்றால், அவளால் அந்த நிமிடம் என்ன செய்ய முடியும்? அவளது மனம் எதை யோசிக்கும்? பலரும் கூடி நின்று, சம்பந்தப்பட்ட நபர் மோதிரம் போடுவதை என்கரேஜ் செய்து ஆரவாரம் செய்யும் போது, அந்த பெண்ணால் அந்த நொடி என்ன முடிவு எடுக்க முடியும்? பலரும் மகிழ்ச்சியோடு அந்த சம்பவத்தை வரவேற்கும் போது, முகத்தில் அடித்தால் போல், 'முடியாது' என்று எப்படி சொல்ல முடியும்? அங்கே அவள் நிர்பந்திக்கப்படுகிறாள், கட்டாயப்படுத்தப்படுகிறாள். தீபக் சாஹரின் இந்த செயல், கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு மோசமான மனநிலையை விதைத்துள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.