தென்னாப்பிரிக்க அணியுடன் தோல்வி - மைதானத்தில் கதறி அழுத தீபக் சாஹர்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் இந்திய அணி வீரர் தீபக் சாஹர் கண்கலங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2-0 என தொடரை இழந்த இந்திய அணி இந்த போட்டியிலாவது மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் தீபக் சஹார் ஆகியோருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இந்திய அணி 223 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து பரிதவித்தது. கடைசி நேரத்தில் தீபக் சாஹர் அடித்த அரைசதத்தால் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே தீபக் சாஹர் 54 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், இந்திய அணியின் கடைசி விக்கெட் அப்போது விழுந்ததால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை முழுமையாக இழந்தது.
இந்நிலையில் எப்படியாவது அடித்துவிடுவார்கள் என சாஹர் எல்லைக்கோட்டிற்கு அருகிலேயே பேடை கூட கலட்டாமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்ட உடன் அவர் கண் கலங்கிவிட்டார். தன்னுடைய ஆட்டம் வீணாகிவிட்டதே, இந்திய அணி வெற்றி பெறவில்லையே என அவர் முகம் வாடிவிட்டது.