நான் இறந்துவிட்டதாக 'கண்ணீர் அஞ்சலி'; இதனால் தான் நான்.. தீபா வெங்கட் வேதனை!
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகையான தீபா வெங்கட் தன்னை குறித்து வந்த வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.
தீபா வெங்கட்
தமிழ் திரையுலகில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பிரபலமடைந்தவர் தீபா வெங்கட். இவரின் குறளுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. முதல் முறையாக 'அப்பு' என்ற திரைப்படத்தில் நடிகை தேவயானிக்காக டப்பிங் பேசி தன்னுடைய டப்பிங் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
இவர் சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் செய்துள்ளார். 1994ம் ஆண்டு நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த 'பாசமலர்' என்ற படத்தின் மூலம் திரையில் தோன்றினார். அதனைத் தொடர்ந்து உல்லாசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நடிகையாகவும் இருந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வரை திரையில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து விலகி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக மட்டும் இருந்து வருகிறார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் தீபா வெங்கட். அதில் தன்னை பற்றி வந்த வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசியதாவது "நான் சமூக வலைத்தளத்தில் பார்த்து அதிர்ச்சியான வதந்தி என்றால் நான் கொரோனாவில் இறந்து விட்டேன் என்று சில யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தனர். நிறைய யூடியூப் சேனல்கள் என்னை பற்றி போலியான செய்திகளை வெளியிடுகின்றனர்.
என்னுடைய புகைப்படத்தை வைத்து இரண்டு பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுவது போன்றும், கண்ணீர் விடுவது போன்றும் எடிட் செய்து 'கண்ணீர் அஞ்சலி' என்று நிறைய புகைப்படங்கள் யூடியூபில் வந்திருக்கிறது. அதைப் பார்த்து என்னுடைய அம்மா அப்பா உறவினர்கள் கூட நிறையவே வருத்தப்பட்டார்கள்.
அவர்களுக்கு அது எவ்வளவு வலியை ஏற்படுத்தியிருக்கும். இது போன்ற ஒரு வீடியோவை எதற்கு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இது நான் வெறுத்த ஒரு செயல் என்று" தீபா வெங்கட் மனமுடைந்து பேசியிருக்கிறார்.