ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கையை மீட்ட அக்கா - குவியும் பாராட்டு
சிவகங்கை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் அக்காவே காப்பாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சம்பவம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வருகின்றன.
விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் பல மணி நேர பெரு முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.
இந்நிலையில், அப்படி ஒரு அபாயகரமான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தம் தங்கையை உடனடியாக, சமயோசிதமாக செயல்பட்டு அந்தக் குழந்தையின் அக்காவே மீட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வெட்டுக்காட்டு கிராமத்தில் நடந்துள்ளது.
அந்த ஊரைச் சேர்ந்த பிரபு என்பவரின் மூன்று பெண் குழந்தைகளில் இரு மகள்கள் தேவிஸ்ரீ (14) ஹர்சிணி (9) இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்க சென்றனர்.
அங்கே இருந்த ஒரு கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் 'அக்கா காப்பாற்று' என்ற அலறலோடு விழுந்துள்ளார் ஹர்சினி.
கடந்த ஆண்டு அமைக்கப்பட்டு, ஆனால், தண்ணீர் இல்லாததால் கைவிடப்பட்ட கிணறு அது.
தங்கையின் அலறலைக் கேட்டவுடன் உடனடியாக செயல்பட்ட தேவிஶ்ரீ குழிக்குள் விழுந்த தங்கையின் தலைமுடியை பிடித்து மேலே தூக்கியபடியே, அவரும் சப்தமிடவே, அருகிலுள்ளவர்கள் வந்து சிறுமியை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெற்றி வரை போர் குழிக்குள் இறங்கிய சிறுமி மீட்கப்பட்ட சம்பவம்,
கிராம மக்களிடம் அதிர்ச்சியையும் மகிழ்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வருவாய் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்,
உடனடியாக ஆழ்துளை கிணற்றை மூடி அதன் மீது முட்செடிகளை போட்டு விட்டு சென்றுள்ளனர்.