தேசிய சின்னமாகிறதா ராமர் பாலம்? சுப்ரீம் கோர்ட்டிற்கு வரும் விசாரணை!
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணிய சாமியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
ராமர் பாலம்
இந்தியாவின் நெடுங்கால விவாதங்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் ராமர் பால விவகாரத்துக்கு அதில் நிச்சயம் இடமுண்டு. அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வாதப்பிரதிவாதங்களால்
அரசியலாக மாறி நிற்கும் இந்த விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்தியாவின் இராமேஸ்வரம் தீவுக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடாக் கடலில் காணப்படும் மணற்திட்டுகள்தான் 'ராமர் பாலம்' என்று சொல்லப்படுகிறது.
தேசிய சின்னம்
இந்தநிலையில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று ஆஜராகி முறையிட்டார்.
அந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்குடன், ஏனைய இடைக்கால மனுக்களையும் சேர்த்து வருகிற 26-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.