சாலையில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை உரிமையாளர் எடுக்காவிட்டால் இதான் நடக்கும் - மேயர் பிரியா அதிரடி!
சாலையில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் தொடர்பாக மேயர் ப்ரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்னன், கமிஷனர் லலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மேயர் பிரியா பேசுகையில் 'சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இவற்றை சென்னை போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து அகற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வாகனங்களை நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ள வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேயர் பிரியா
இதனிடையே மாநகராட்சி பகுதிகளில் 1038 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்திட அறிவுறுத்தி உள்ளோம்.
அதன்பின்னரும், அப்புறப்படுத்தப்படாத வாகனங்களை செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னை மாநகர போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டு ஏலம் விட முடிவு செய்துள்ளோம்.
எனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும்' என்று மேயர் பிரியா பேசியுள்ளார்.