மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல் - திடீரென எழுந்து வந்ததால் தெறித்து ஓடிய மக்கள்
மத்திய பிரதேசத்தின் மொரோனாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து விட்டதாக கருதி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு சற்று முன்பு உயிருடன் எழுந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயக்கம் போட்டு விழுந்த இளைஞர்
மத்திய பிரதேசத்தின் மொரோனாவின் வார்டு எண்.47 பகுதியைச் சேரந்தஜீது பிரஜாபதி என்ற இளைஞர் நீண்ட நாட்களாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை மாலை திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.சிலர் அவரது மூக்கு மற்றும் வாயில் விரல்களை வைத்து அவரது சுவாசத்தை சோதித்த பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து அவரது உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்கள் கூடினார்கள். அதன் பின்னர் அவரது சடலம் ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மயானத்தில் எழுந்து வந்ததால் பரபரப்பு
அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கு சற்று முன்பு அவரின் உடல் அசைந்துள்ளது.இதனால் அங்கே கூடியிருந்தவர்கள் பயந்து ஓடினார்கள்.
அந்த மனிதர் உயிருடன் இருப்பது தெரிந்தவுடன் அவர்கள் ஒரு மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்துள்ளனர். அவரை சோதித்த மருத்துவர் அவருக்கு இதயம் துடிப்பதை உறுதி செய்துள்ளார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக குவாலியருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இறந்து போனதாக நினைத்தவர் உயிருடன் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.