2 முறை தாக்குதல் நடத்துனாங்க..அண்ணாமலையால் என் உயிருக்கு ஆபத்து!! வீரலட்சுமி பகிர்!!
தனது உயிருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் ஆபத்து இருப்பதாக வீரலட்சுமி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வீரலட்சுமி
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சில மாதங்களாக சீமான் - விஜயலக்ஷ்மி விவகாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். சீமான் விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில், தற்போது தனது கவனத்தை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பக்கம் அவர் திருப்பியிருக்கின்றார்.
சில தினங்கள் முன்பு அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், வெளியிட்டுள்ள வீடியோவில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணியின் பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் லஞ்ச, ஊழல்,பினாமி கருப்பு பணம் மூலமாக 600 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளனர் என குற்றம் சாட்டி இருந்தார்.
அண்ணாமலைக்கும் பங்கு உண்டு
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்ததாக குறிப்பிட்டிருந்த வீரலட்சுமி, அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த விவகாரத்தில் அவர்களுக்கு பக்க பலமாக அண்ணாமலை இருக்கிறார் என தெரிவித்தார்.
இந்தப் பணத்தில் வரும் பங்கு அவருக்கும் செல்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டிய வீரலட்சுமி, இந்த விவகாரத்தில் மூன்றாவது முறையாக அண்ணாமலை மீதும் சேர்த்து வரும் வியாழக்கிழமை புகார் அளிக்க உள்ளதாக பேசி இருந்தார்.
உயிருக்கு ஆபத்து
இந்நிலையில் தான் அவர் திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து தான் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர் என குறிப்பிட்டு, இந்த தாக்குதலை பாஜகவை சேர்ந்த அக்கட்சியின் மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மற்றும் எம்.ஜி.பாஸ்கர் ஆகியோர் பின்னணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கும் - தன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், தன் அமைப்பை சேர்ந்தவர்களின் உயிருக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டால் அண்ணாமலை தான் பொறுப்பு என குறிப்பிட்டு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.