ஐயோ அடிக்காதீங்க வலிக்குது.. கதறியும் விடாமல் அடித்ததால் வியாபாரி உயிரிழப்பு..தாக்குதல் நடத்திய எஸ்எஸ்ஐ கைது.!
சேலம் மாவட்டத்தில் சோதனைச்சாவடியில் போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன். இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் வாழப்பாடி சாலையில் மளிகை மற்றும் பழக்கடைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடையை தமிழக அரசு திறந்துள்ளது. இதனிடையே மதுபிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.
இதனால், பக்கத்து மாவட்டத்திற்கு சென்று முருகேசன் மற்றும் அவரது நண்பரும் மது அருந்தி விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். கல்வாரயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனை சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முருகேசன் மற்றும் அவரது நண்பரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, குடிபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த போலீசார் முருகேசனை தாக்கியுள்ளனர். இதில், நிலைதடுமாறு கீழே விழுந்த முருகேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே ஆம்புலன்ஸ் வரழைக்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக முருகேசன் உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முருகேசனின் உயிரிழப்பிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், விசாரணையின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.