ரீ-ட்வீட் செய்ததால் வந்த வினை; மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா - அப்படி என்ன செய்தார்?
ரீ-ட்வீட் செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை விதித்துள்ளது சவுதி அரேபியா.
சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் தண்டனைகள் என்பது மிகவும் கடுமையானதாகவே இருந்து வருகிறது. உலகில் அதிக அளவு மரண தண்டனை வழங்கும் நாடுகளில் சீன, ஈரானுக்கு அடுத்த இடத்தில் சவுதி அரேபியா அரசு உள்ளது. அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சவுதி அரேபியாவில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மெக்கா நகரில் வசித்து வரும் நாசர் அல்-காம்டி என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சவுதி அரேபியா அரசுக்கு எதிராக தொடர்ந்து ட்விட்டரில் ரீட்வீட் மற்றும் யூடியூபில் கருத்துகளையும் தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மதத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், சமூகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்துவிட்டதாகவும், சவுதி அரேபியா அரசுக்கு எதிராக சதிசெய்ததாகவும், பட்டத்து இளவரசர் மீது அவதூறாக குற்றம்சாட்டியதாகவும் சவுதி சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மரண தண்டனை
இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி, நாசர் அல்-காம்டிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரீட்வீட் செய்ததற்கெல்லாம் மரண தண்டனையா? என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் லினா அல்ஹத்லூல் 'ட்வீட்களுக்காக அல்-காம்டி என்பவருக்கு மரண தண்டனை வழங்கி இருப்பது மிகவும் கொடூரமானது. சவூதியில் அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு' என சவுதி அரேபியா அரசை விமர்சித்துள்ளார்.