பணிக்கு வந்த பெண் செவிலியர் இறப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
திருமணமாகி 6 மாதம் ஆன பெண் செவிலியர் பணியின் போது உயிரிழந்த காரணத்தால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ராப்பூசல் பகுதியைச் சேர்ந்தவர் உமா (20). இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனையில்வேலையும் செய்து வருகிறார்.
இவருக்கும் தனியார் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் இவரது உறவினரான ஆனந்த் (29) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் உமா வழக்கம் போல் நேற்று மருத்துவமனைக்கு பணிக்கு வந்துள்ளார்.அப்போது திடீரென உமா மருத்துவமனையில் மயக்கமடைந்து விட்டார். நீங்கள் உடனடியாக வர வேண்டும் என்றும் உமாவின் குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த உமாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு வந்து கேட்டபோது உமா இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து உமாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உமாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண் எவ்வாறு மரணமடைந்தார்? வேறு ஏதும் பிரச்னையா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.