காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் மரணம்: ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் என்னவாகும்?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே கொரோனா பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.
இதற்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே வேட்பாளர் உயிரழந்ததால் ஸ்ரீவில்லிபுத்தார் தொகுதி தேர்தல் என்னவாகும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒருவேளை காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், மே 2 வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல் நடைபெறும்.
மாதவராவ் வெற்றி பெற்றால் மட்டும் இடைத்தேர்தல் கட்டாயம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நிச்சயம் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தான் வெற்றிபெறுவார். அங்கு இடைத்தேர்தல் நடக்கும் போது மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் போட்டியிடுவார் எனக் கூறியிருக்கிறார்.