சேலம் - வீரபாண்டி தொகுதி சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மோகன் திடீரென மரணமடைந்துள்ளார்.
சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி சின்னையாபுரத்தைச் சேர்ந்தவர் மோகன் (61). இவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். சமூக ஆர்வலரான மோகன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி அன்று இரவு மோகன் குளிப்பதற்காக குளியல் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டது. உடனே உறவினர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கடந்த 5 நாட்களாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் மோகன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இவரின் மரணம் அவரது ஆதரவாளர்களுக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.