காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த மகன் நா.த.க மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!
காவிரி நதிநீர் போராட்டத்தின் போது தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் நாம் தமிழர் சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
காவிரி நதி நீர் போராட்டம்
எப்போதும் தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் காவிரி நதி நீர் பிரச்சனை பெரும் சவாலாக இருந்து வருகின்றது. அது கடந்த 2016'இல் பல இடங்களில் போராட்டமாக வெடித்தது. குறிப்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
அதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற பேரணியில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் அமீர் போன்றோர் பங்கேற்றனர். இதே போல, திருவாரூரை சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவரும் கலந்து கொண்டார்.
காசு வாங்கிட்டு
அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவர் உயிர் இழந்தார். உயிரிழந்த விக்னேஷ் குமாரின் தாயார் செண்பகலெட்சுமி பத்த்திரிகையாளர் மன்றத்தில் வைத்து செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது அவர் நாம் தமிழர் சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் பேசும் போது, விக்னேஷுக்கு நினைவு மண்டபம் கட்ட வெளிநாட்டில் பணம் வாங்கி அவர்களுக்கு பிரித்து கொண்டார்கள், மணி மண்டபம் காட்டவில்லை. விக்னேஷின் உயிர் தியாகம் எவ்வளவு பெரிசு என்பதை சிந்திக்க தவறிவிட்டு, விக்னேஷ் எந்த கட்சியில் பயணித்தார் என சிந்திப்பது கீழ்த்தரமான விஷயம்.
எனது கண் அறுவை சிகிச்சைக்கு நாம் தமிழர் தரப்பில் எந்த உதவியும் தரவில்லை. அதனை என் சித்தி தான் செய்தார். எங்களுக்கு நகை கொடுத்தேன் என அவதூறுகள் பரப்புகிறார்கள். அதனை அவர்கள் சீமானிடம் சொல்லட்டும். சீமான் அதனை எந்த கோவிலில் மீதும் தனது மகன் மீது சத்தியம் செய்து சொல்லட்டும்.
இளைஞர்களின் உணர்வுகளும், தியாகமும் வியாபாரமாக்கப்படுகிறது. இதில் கயல்விழி சீமான் இருவரிடமும் நான் நேருக்கு நேர் பேச தயாராக உள்ளேன்.