அழுகிப் போன சடலம்.. அருகில் கூட செல்லாத மக்கள்: சுமந்து சென்ற பெண் போலீஸ்

andhra performing dgp
By Jon Feb 04, 2021 04:23 PM GMT
Report

ஆந்திரப் பிரதேசத்தில் வயதான ஒருவரின் சடலத்தை, பெண் உதவிக் காவல் ஆய்வாளர் ஒருவர் சுமந்து சென்றது மட்டுமின்றி இறுதி மரியாதை செய்யவும் உதவியது பலரின் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமத்தில் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு நேற்று (பிப்வரி 1, திங்கட்கிழமை) தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா, முதியவரின் சடலத்தைப் பார்வையிட்டார். அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருந்தது. எனவே பலரும் சடலத்துக்கு அருகில் கூடச் செல்ல விரும்பவில்லை. இறந்து கிடந்த முதியவரைக் குறித்து விசாரித்திருகிறார் அப்பெண் உதவி ஆய்வாளர். அவர் ஒரு யாசகர் எனத் தெரிய வந்தது.

அவரைக் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே, இறந்த முதியவருக்கு இறுதி மரியாதை செய்ய லலிதா சேரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு அழைத்துப் பேசினார் சிரிஷா. முதியவரின் பிணம் இருந்த இடத்துக்கும், காவல் துறை வாகனத்துக்கும் சுமாராக ஒரு சில கிலோமீட்டர் தூரம் இருந்ததால், அவரின் சடலத்தை எடுத்துச் செல்ல கிராம மக்களிடம் உதவி கோரினார்.

யாரும் உதவிக்கு வராத நிலையில், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன், தானே சடலத்தைச் சுமந்து வந்தார். மேலும், இறுதி மரியாதை செய்வதற்காக தனது சொந்த பணத்திலிருந்து சிறிது தொகை அளித்தும் உதவி செய்திருக்கிறார்.


காவல்துறை பெண் அதிகாரியின் இந்த செயல், ஆந்திராவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் காவல் துறையின் டிஜிபி கெளதம் சவாங் உட்பட பல்வேறு அதிகாரிகளும், பொது மக்களும் பெண் உதவி ஆய்வாளர் சிரிஷாவை பாராட்டி இருக்கிறார்கள். இதுதொடர்பாக, ஆந்திரப் பிரதேச காவல்துறை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், சிரிஷா முதியவரின் சடலத்தைச் சுமந்து சென்ற காணொளியைப் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளது சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

"நான் என் கடமையை தான் செய்தேன், இதில் பெரிதாகக் குறிப்பிட என்ன இருக்கிறது. ஆனால், இதுதொடர்பாக உயரதிகாரிகள் என்னை பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, டிஜிபி இதுகுறித்து கேட்டுவிட்டு, 'ஒரு பெண்ணாக நீங்கள் இதை செய்தது பாராட்டுக்குரியது' என்றார். நேரமும், தேவையும் ஏற்படும்போது தயக்கமின்றி சேவை செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டுள்ளது.

இது காவல் பணியை விட மேலானது. இதுபோன்ற என் சேவைகள் தொடரும்" என பிபிசி தெலுங்கு சேவையிடம் கூறியுள்ளார் சிரிஷா. விசாகப்பட்டினம் தான் சிரிஷாவின் சொந்த ஊர். சிரிஷாவின் தந்தை ஒரு கொத்தனார்.

2014-ம் ஆண்டு காவலராக, மதிலப்பெலம் கலால் வரித் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நந்திகாமாவில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டார்.