போராடி தோற்ற சென்னை - புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் கெய்க்வாட்(13 ரன்கள்), டூபிளிசிஸ் (10 ரன்கள்), உத்தப்பா(19 ரன்கள்), மொயீன் அலி(5 ரன்கள்) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க 8.3 ஓவர்களில் அந்த அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனைத் தொடர்ந்து களம் கண்ட அம்பத்தி ராயுடு - கேப்டன் தோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க போராடினர். இதில் தோனி 18 ரன்களில் அவுட்டாக அம்பத்தி ராயுடு அரைசதமடித்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்ஸர் படேல் அதிகப்பட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனிடையே 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் தவான் 39 ரன்கள், ஹெட்மேயர் 28 ரன்கள் விளாச 19.4 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாகூர், ஜடேஜா இருவரும் அதிகப்பட்சமாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.