வீணானது சாம்சனின் அதிரடி ... டெல்லியிடம் போராடி தோற்ற ராஜஸ்தான் அணி..!

Ipl 2021 RRvDC
By Petchi Avudaiappan Sep 25, 2021 04:14 PM GMT
Report

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணியின் சேத்தன் சகரியா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ராகுல் திவாட்டியா, கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 155 ரன்கள் இலக்குடன் விளையாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டோன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் வந்த வேகத்தில் லியாம் 1, ஜெய்ஸ்வால் 5 ரன் எடுத்து பண்ட்டிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 70 ரன்கள் விளாச மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த டெல்லி அணி இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்திற்கு சென்றது.