பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்... மத்திய கல்வி அமைச்சருக்கு தயாநிதிமாறன் எம்.பி. கடிதம்
பிஎஸ்பிபி பள்ளியில் பாலியல் தொல்லை குறித்து உரிய விசாரணை நடத்த மத்திய கல்வி அமைச்சருக்கு தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் செயல்படும் பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பள்ளி சார்பில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின் உரிய விளக்கம் அரசுக்கு பள்ளி நிர்வாகம் கொடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். மேலும் ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் பள்ளியின் மீது தரப்பட்டிருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாடகி சின்மயி, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தயாநிதி மாறன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணைகளை நடத்த உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.