ஆ.ராசாவைத் தொடர்ந்து சர்ச்சையாகும் தயாநிதி மாறனின் பேச்சு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து நேற்று தயாநிதி மாறன் குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது, “வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குளை பெற்று தமிழகத்தில் காலூன்ற பாஜக நினைத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள இந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையேயான பாச உறவை என்றும் பிரிக்க யாராலும் முடியாது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அம்மா என்றும் மோடி எங்கள் அப்பா என்றும் கூறுகிறார். என்ன உறவு முறை என்று பாருங்கள் இதை சொன்னால் தவறு என்பார்கள்” என்றார்.
சமீபத்தில் திமுக எம்.பி ஆ.ராசாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் தற்போது தயாநிதி மாறனின் இந்த கருத்துக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.