5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை- ஏடிஎம்களில் பணம் வருமா? - வாடிக்கையாளர்கள் வேதனை
ஜனவரி மாதத்தில் பண்டிகை நாட்கள் இருப்பதால் அதிக விடுமுறை இருக்கும். ஆனால் அதன் பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விடுமுறை நாட்கள் குறைவாகவேதான் இருக்கும். அதனால் பெரும்பாலானோர் வங்கி வேலை நாட்களை திட்டமிட்டு பணபரிவர்த்தனை செய்வார்கள். அந்த வகையில், இந்த மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதனை விரைவாக முடித்துக் கொள்வது காலச்சிறந்ததாகும்.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். ஆனால் நாளை முதல் அடுத்தடுத்து 5 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி மார்ச் 11ம் தேதி மகா சிவராத்திரி காரணமாக சில வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
13 மற்றும் 14ம் தேதிகள் இரண்டாவது சனி, ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். மார்ச் 15, 16 தேதிகள் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை வருகிறது. ஆனால், மார்ச் 15 மற்றும் 16ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களிலும் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏடிஎம் இயந்திரங்கள் முடங்கிப் போவதற்கான அபாயம் உள்ளது. ஏற்கெனவே பல ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வருவதாக வாடிக்கையாளர்கள் குறை கூறி வருகிறார்கள்.
இதனையடுத்து, வங்கிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறையாக இருந்தால், வாடிக்கையாளர்களும் கடும் சிரமம் ஏற்படும் என்று கூறி வருகிறார்கள்.