10 நாட்களாக தாயின் சடலத்துடன் வசித்த மகள் : லக்னோவில் அதிர்ச்சி சம்பவம்

By Irumporai May 21, 2022 10:29 AM GMT
Report

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திரா நகரில் வசித்து வந்தவர் சுனிதா தீட்சித். இவர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் ரஜ்னீஷ் தீட்சித்தை விவாகரத்து செய்து தனது மகள் அங்கிதா தீட்சித் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவரும் இவரது மகளும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

வீட்டிலிருந்து வித்தியாசமான துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  

காவல்துறையினர் வந்து வீட்டின் கதவை தட்டியபோது, உள்ளிருந்து மகள் அங்கிதாவின் குரல் மட்டும் கேட்டுள்ளது. ஆனால் அவரும் கதவை திறக்காததால், வேறு வழியின்றி தச்சரை வரவழைத்து கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்தனர் காவல்துறையினர்.

வீட்டை சோதனையிட்ட போது படுக்கை அறையின் தாய் சுனிதாவின் உடல் சிதைந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்கு அடுத்த அறையில் இருந்த மகளிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் அளித்த பதில்கள் தெளிவற்றதாகவும் அவர் சரியான மனநிலையில் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

தாய் சுனிதா இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்காமல் வீட்டில் தனியே இருந்தது மகள் அங்கிதாவிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இறந்து போன சுனிதா கடந்த சில வருடங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.