ஊர் மாறி பெண் எடுத்ததால் வெறுப்புணர்வு ; மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகள்!
திருக்கழுக்குன்றத்தில் அடகுக்கடை உரிமையாளர் மனைவி கொலை வழக்கில் புதிய திருப்பமாக மருமகளே மாமியாரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பத்தேசந்த் வயது 78 , இவர் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி பிரேம்கன்வர் வயது 70, இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். முதல் இரண்டு மகன்கள் சென்னையில் உள்ளனர், மூன்றாவது மகன் பிண்டுகுமார் வயது 42, அவரது மனைவி சுஜாதா மற்றும் நான்காவது மகன் கமலேஷ் ஆகியோர் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பத்தேசந்த்யின் மனைவி பிரேம்கன்வர் மர்மமான முறையில் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூன்றாவது மருமகள் சுஜாதா தனது உறவினர்களை பீகாரில் இருந்து வரவழைத்து கொலை செய்தது தெரியவந்தது.
போலிஸார் விசாரணையில், பிரேம்கன்வர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மகன் பிண்டுகுமாருக்கு அவர்களது மாநிலமான ராஜஸ்தான் பெண் கிடைக்காததால், பிகார் மாநில பெண்ணான சுஜாதாவை திருமணம் செய்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுஜாதாவை, அவரது மாமியாரான பிரேம்கன்வர் எப்போதும் தரக்குறைவாக நடத்தியதாகவும், பிண்டுகுமார் தனியாக தொழில் துவங்க பண உதவி கேட்டும் செய்யாததாலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் சுஜாதா.
இதனால் தனது மாமியாரை கொலை செய்ய பலமுறை முயற்சி செய்தும் முடியாததால் பிகாரில் உள்ள அவரது மாமா மகன்களான சுமித் மற்றும் தீபக்கிடம் விஷயத்தை கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கழுகுன்றத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. சுஜாதா அவர்களோடு திட்டமிட்டு நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மாமியார் பிரேம்கன்வரை கத்தியால் குத்தியுள்ளனர்.
அங்கிருந்து மூவரும் தப்பிக்க முயலும்போது சுஜாதாவின் காலில் அடிபட்டதாக கூறப்படுகிறது இதனால் சுஜாதாவை பிடிக்க முடிந்ததாக தெரிகிறது.
தப்பியோடிய மற்ற இருவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.