மாமியாருக்கு ஸ்கெட்ச் போட்ட மருமகள் - நகை பறிப்பில் ஆண் நண்பருடன் கைது

chennai avadi chainsnatch
By Petchi Avudaiappan Feb 13, 2022 12:02 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

சென்னையில் ஆண் நண்பருடன் இணைந்து மாமியாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் தேவி நகர் சிவகாமி தெருவை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாடியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா என்ற மோகனசுந்தரி மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர்களது வீட்டில் வினோத்குமாரின் தாயார் லலிதா  வசித்து வருகிறார்.

வழக்கம்போல் நேற்று வினோத்குமார் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் லதாவும் வீட்டிலிருந்து மளிகை கடைக்கு சென்று விட்டார். வீட்டில் லலிதா மட்டும் தனியாக இருக்கும்போது சுமார் 30வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

இதுதொடர்பாக மருமகள் லதா ஒன்றும் தெரியாதது போல் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில் பைக்கில் வந்த லதா வாலிபர் ஒருவரை வீட்டின் அருகில் இறக்கி விட்டு செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் லதாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

லதாவின் தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில் மாமியார் லலிதாவிடம் இருந்து நகைகளை வாங்கி அடகு வைத்து மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். பின் லலிதா நகைகளை உடனடியாக மீட்டு தருமாறு லதாவுக்கு டார்ச்சர் கொடுத்ததால் அவரும் பணத்தை கட்டி அடகு கடையில் இருந்து நகையை மீட்டு கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மாமியார் லலிதா மீது  ஆத்திரம் இருந்ததால் அவரை பழிவாங்க வேண்டும் என லதா திட்டம் தீட்டியுள்ளார். தனது பள்ளி தோழரான ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது உதவியை நாடியுள்ளார். அதன்படி நகைப்பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.