பிரச்சாரம் செய்ய மகளுக்கு தடை - நெருக்கடியில் சிக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது. இதனால் தேர்தல் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. புதுக்கோட்டை விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இதனால் விராலிமலை தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் விஜயபாஸ்கர் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு உதவியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் விராலிமலை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் பேசியதாவது - “நான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த மக்களுக்காகவும், இந்த மண்ணுக்காகவும் உழைத்து வருகிறேன்.
நான் இதுவரை எந்த தீங்கையும் இந்த மக்களுக்கு செய்தது கிடையாது. என்னால் முடிந்த எல்லா உதவிகளும் செய்திருக்கிறேன். எனக்காக பிரச்சாரம் செய்த என் ஒன்பது வயது மகளைக் கூட பிரச்சாரம் செய்யவிடாமல், தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

நெருக்கடி எல்லாம் தாண்டி விராலிமலை மக்களுக்காக நான் தொடர்ந்து உழைப்பேன். கொரோனா காலத்தில் கொரோனா வார்டுக்குள் தைரியமாக சென்று நோயாளிகளுடன் பேசிய ஒரே அமைச்சர் நான்தான். அதற்கு காரணம் நீங்கள் அளித்த வாக்குதான்” என்று பேசினார்.