தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு
கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துவது தொடர்பாக
மாநில தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் நடத்தியது. இதனையடுத்து இன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது.
அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் வரும் ஜனவரி 28-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி நிறைவடையும் எனவும், வேட்பு மனுக்கள் பரிசீலனை பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்ரவரி 7-ம் தேதி என தெரிவித்த அவர் வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவித்தார்.