நான் பதுங்குனதே பாயுறத்துக்கு தாண்டா.. இங்கிலாந்து அணியின் கனவை கலைத்த மிட்செல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.
அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 166 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மொய்ன் அலி 51* ரன்களும், டேவிட் மாலன் 41 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் ஆடம் மில்னே, இஷ் சோதி மற்றும் டிம் சவுத்தி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரர்களான கப்தில் (4) மற்றும் கேன் வில்லியம்சன் (5) மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் வந்த கான்வே 46 ரன்களிலும், பிலிப்ஸ் 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். கடந்த போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான மிட்செலும் இந்த போட்டியில் பொறுமையாக விளையாடியதால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து போட்டியை மாற்றினார்.
ஜேம்ஸ் நீஷமின் விக்கெட்டையும் இங்கிலாந்து அணி 18வது ஓவரின் இறுதி பந்தில் கைப்பற்றியதால், கடைசி இரண்டு ஓவர்களில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
18வது ஓவர் வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொறுமையாக ரன் சேர்த்த மிட்செல் (72* ரன்கள்), 19வது 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரி பறக்கவிட்டு நியூசிலாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி முதன்முறையாக டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.