"நான் ஒரு பெருமை மிக்க இந்து..இது பாகிஸ்தான் மீதான மரியாதையை கெடுத்து விடும்" - டேனிஷ் கனேரியா

cricket people danish kaneria pakistan player talks about attacks on minority
By Swetha Subash Dec 24, 2021 05:55 AM GMT
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பாகிஸ்தானில் மதச்சிறுபான்மையினரான இந்துக்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு இத்தகைய அடக்குமுறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், ஹிந்துக்கள் மீதான அடக்குமுறை சம்பவங்கள் பாகிஸ்தானுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா.

இது தொடர்பாக செய்தி ஏஜென்சி ஒன்றிடம் கூறிய டேனிஷ் கனேரியா,

"நான் ஒரு பெருமை மிக்க இந்து, அனைத்திற்கும் மேலாக சனாதன தர்மமே எனக்குப் பெரிது. ஆனால் அதே சமயத்தில் எல்லா மதத்தையும் நான் மதிக்கிறேன். பாகிஸ்தான் எனக்கு ஏகப்பட்ட அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் காட்டியுள்ளது.

எனவே தான் சிறுபான்மையினர் நசுக்கப்படும் போது என் மனம் வேதனையடைகிறது." என்றார்.

டேனிஷ் கனேரியா இது தொடர்பாக சமூக ஊடகமான “கூ” மற்றும் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் இந்துக் கடவுள் சிலையை சேதம் செய்த விஷமிகளின் வெறிச்செயல் பதிவாகியுள்ளது.

டிசம்பர் 20ம் தேதி கராச்சியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கனேரியா இத்தகைய சம்பவங்களை கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டின் கவுரவத்துக்கு இது களங்கமாகும் என்று பதிவிட்டுள்ளார் கனேரியா.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் தன் ட்விட்டர் பதிவில் டேக் செய்துள்ள கனேரியா, "கராச்சியில் மதச்சுதந்திரம் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.

இது பாகிஸ்தான் மீதான மரியாதையை கெடுத்து விடும். பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கனேரியா பதிவிட்டுள்ளார்.

"பாகிஸ்தானில் இதனைத் தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். ஒரு இந்துவாக என் மதத்தைக் காக்க நான் விழைகிறேன்." என்றார்.