‘ஸ்டெப் மறந்து வேற போட்டு சமாளிச்சிடுவாரு, மாஸ்டர் திட்டுவாங்கன்னு பயப்படுவாரு’ - ரஜினி குறித்த ரகசியங்களை போட்டுடைத்த மாஸ்டர்!
தமிழ் சினிமாவில் சோலோ நடன கலைஞராகவும், குழு நடன கலைஞராகவும் இருந்து பின்னாளில் நடன இயக்குநராக பணியாற்றியவர் ஜான் பாபு மாஸ்டர். 90-களில் வெளியான பல முன்னணி நடிகர்களின் படங்களில் முதல் வரிசையில் ஆடிருப்பார் இவர்.
மேலும் 90-களில் திரைத்துறையில் கோலோச்சிய பல முன்னணி நடன இயக்குநர்களுடன் ஜான் பாபு பணியாற்றியிருக்கிறார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அவர் பணியாற்றிய அனுபவங்கள் மனம் திறந்துள்ளார் ஜான் பாபு மாஸ்டர்.
அந்த பேட்டியில், "நான் ரஜினி சாருக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தது இல்ல ஆனா ஒரு ஆறு, ஏழு படங்களுக்கு குழுவில் இணைந்து ஆடியிருக்கேன். மூன்று முகம் முழுவதுமே நான்தான் பண்ணேன். ரஜினி சார் நிறைய படங்கள் பண்ண பிறகும் நான் உதவி நடன இயக்குநராத்தான் அவர் படத்துகு போனேன்.
அப்போ பார்த்தாலும் அவர் ஒரு புதுமுக நடிகர் போல மாஸ்டர் பின்னால, கைக்கட்டிக்கிட்டு நிப்பாரு. சுந்தரம் மாஸ்டர், ரகு மாஸ்டர்க்கிட்ட எல்லாம் நான் வேலை செஞ்சிருக்கிறேன். அவருடைய படங்கள் பண்ணும் பொழுது, அசிஸ்டெண்ட்ஸ்க்கிட்ட கேட்டுப்பாரு. மாஸ்டருக்கு அது தெரியக்கூடாதுன்னு சொல்லுவாரு. காரணம் மாஸ்டர் பார்த்தா திட்டுவாங்களாம்.
அதெல்லாம் நாங்க நினைக்குறது. அதை அவரே சொல்லுவாரு. குழந்தை போல் நடந்துக்கொள்வாரு. பாட்டு போடாமல் , கவுண்ட்லயே சொல்லிக்கொடுக்க சொல்லுவாரு. அவருக்கு எல்லாமே தெரியும் . அவர் என்ன பண்ணாலும் அழகாத்தான் இருக்கும். மறந்துட்டாலும் கூட அழகா ஒரு ஸ்டெப் போட்டுருவாரு.
ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரு. ஆனால் மாஸ்டர் சொல்லிக்கொடுத்த நடன அசைவுகளைத்தான் போடனும்னு சொல்லுவாரு. நான் உதவி இயக்குநராக இருந்தாலும் ரொம்ப அன்பா நடந்துப்பாரு.
அவர் என்ன பண்ணாலும் சூப்பர்தாங்க. அவருக்கு எல்லாம் தெரியும்னு அவர் நடந்துக்க மாட்டாரு. ரொம்ப குழந்தை மாதிரி கற்றுக்கொள்வார். என் பையன் கூட நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அவர் கிட்ட ரஜினி சார் என்னை நினைவு வைத்து நலம் விசாரிச்சுருக்காரு. ” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் ஜான் பாபு மாஸ்டர்.