5 பந்துகளில் 5 சிக்ஸர்... வங்கதேசத்தை கதற விட்ட ஆஸ்திரேலிய வீரர்
வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் டேனியல் கிறிஸ்டியன் அடித்த சிக்ஸர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் வங்கதேச அணி வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்ற 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 105 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸி. அணியில் டேனியல் கிறிஸ்டியன் அதிரடி காட்டி 39 ரன்கள் விளாசினார்.
இதில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் வீசிய ஒரு ஓவரில் கிறிஸ்டியன் 5 சிக்ஸர்களை பறக்க விட்டார். இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடிந்தது. இல்லையென்றால் இப்போட்டியிலும் தோற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.